யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலையம் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் இராசபாதை வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளிலேயே இயங்கி வந்தது.
இதனை எதிர்த்து காணி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தனியார் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பொலிஸார் வெளியேற உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய, பழைய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன், பழைய காணி மற்றும் வீடுகளின் சாவிகள் அனைத்தும் உரிய பொதுமக்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாழ். மாவட்ட செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.







