காணாமல் போனவர்களுக்காக சிறந்ததொரு இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
காணாமல் போன ஒருவருக்காக வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல என ஹர்ஷன நாணாயக்கார அங்கு குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒரு விசேட பிரிவினராகக் கருதி, இதைவிடச் சிறந்த இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
அக்குழு இழப்பீட்டுப் பொதியொன்றை வழங்குவது குறித்து கலந்துரையாடி வருவதாகவும், காணாமல் போனவர்களின் உறவினர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை விசாரிப்பதன் நோக்கம் இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல என்றும், என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
காணாமல் போன நபர்களுக்கு விரைவான நீதியை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு 11,0000 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அவற்றைத் தீர்ப்பதற்காக விசாரணைக்குழுக்களை நியமிக்க விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
75 பேரைக் கொண்ட 25 விசாரணைக் குழுக்கள் தற்போது செயற்பட்டு வருவதாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலுக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் பெருமளவில் வருகை தந்துள்ளதால், தற்போதைய அரசாங்கத்தின் பொறிமுறை மீது கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் இன்னும் நீடிப்பது, கடந்த அரசாங்கங்கள் அவற்றை முறையாகத் தீர்க்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
காணாமல் போன உறவினர்கள் தொடர்பாக பல்வேறு ஆணைக்குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பலமுறை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
உறவினர்கள் காணாமல் போன கடந்த காலத்தை மறந்துவிடுமாறு தான் கூறவில்லை என்றும், புதியதாக சிந்தித்து, நம்பிக்கையைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களின் மனங்களையும் வென்று தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதொரு முடிவை வழங்க வேண்டும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார மேலும் தெரிவித்தார்.







