இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற “ரதம ஏகத” தேசிய செயற்பாடுகள் ஆணையத்தின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூகச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்களும் வலுவான நடவடிக்கைகளும் அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், போதைப்பொருள் நெருக்கடியை எதிர்கொள்வதிலும், போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான பொதுமக்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் மதத் தலைவர்கள், பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பை மேலும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அரசிதழில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகளின் தகவலின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் அளவின் அடிப்படையில், 5 கிராமுக்கும் குறைவானவை மற்றும் 10 கிராமுக்கும் குறைவானவை உள்ளிட்ட வகைப்பாட்டு முறையொன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், முறைப்பாடு கிடைத்தவுடன் சந்தேக நபர்கள் தாமதமின்றி நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறன் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மேலும், போதைப்பொருள் தொடர்பான ஆதாரங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கடற்படையின் உதவியும் பெறப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்







