டிட்வா சீரமைப்புப் பணிகளில் மேலும் தாமதம்

6
0
Spread the love

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அழிவுகளை சீரமைக்கும் பணிகளை 2026ஆம் ஆண்டில் நிறைவு செய்ய முடியாது என 2027ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக பாராளுமன்றத்தினால் 2026ஆம் ஆண்டுக்காக 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், மீள் குடியேற்றத் திட்டத்தின் அளவு மற்றும் சிக்கல்தன்மை காரணமாக அந்த அனைத்துப் பணிகளையும் இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய முடியாது என குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், இந்த வருடத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நிதி ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத இருப்பு ஏதேனும் காணப்படின், அதனை 2027ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்வதற்கு பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிறைவு செய்வதற்கு எஞ்சியுள்ள பணிகளுக்கான நிதி அளவு, இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேவைகளின் ஒரு பகுதியை 2027ஆம் ஆண்டுக்கான முதன்மைச் செலவு வரம்பிற்குள் நிர்வகிக்க முடிந்த போதிலும், எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்கு மேலதிக வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தேவைப்படலாம் எனவும், அந்த நிதியின் அளவு மற்றும் அவை தேவைப்படும் காலம் என்பன இத்தருணத்தில் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் நிதி மூலோபாய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கான செலவுகளுக்கு மட்டுமாக, 2027ஆம் ஆண்டில் துணை மதிப்பீடொன்றின்மூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here