ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில்
வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்றைய தினம் (08.07) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 2022 ஜூலை 14 முதல் 2024 டிசம்பர் 21 வரையான காலப்பகுதியில், சுகீஸ்வர பண்டார ஒரே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இதன்போது ஜனாதிபதி செலவினத் தலைப்பில் இருந்து ஒரே காலப்பகுதியில் இரு பதவிகளுக்குமாக முறைகேடான வகையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று பொது நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கடந்த ஜூன் 18ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







