யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவி வரும் மணல் மற்றும் கிரவல் விநியோகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மணல் விநியோகத்தில் நிலவி வரும் குறைபாடுகள், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்காமையால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், அரசாங்கத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் தனிநபர்களின் கட்டுமானத் தேவைகளுக்கான மணல் விநியோக சிக்கல்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பங்கேற்கவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, மணல் விநியோகத்துடன் தொடர்புடைய திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குறைபாடுகளால் நீடித்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன்படி, மணல் விநியோகத்திற்கான உரிமங்களை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும், குளங்களில் தேங்கியுள்ள மண்ணை அகற்றி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இருந்து மாத்திரம் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு, பிரதேச செயலாளர்கள் ஊடாக வீட்டுத் திட்டங்களுக்குத் தேவையான மணல் விநியோகிக்கப்படவுள்ளது.
அடுத்த மாதம் முதல் மணல் விநியோகம் தொடர்பில் அமைச்சினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அமைக்கப்படும் குழுவின் ஊடாக மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்படும் பகுதிகள் மற்றும் மணல் அகழ்வு தடைசெய்யப்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சட்டரீதியான முறையில் மணல் விநியோகத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நியாயமான மற்றும் குறைந்த விலையில் மணல் சீராக கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ். சுதர்சன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். மோகனபவன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். விஷ்ணுகுமார், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே. பிரகாஸ், கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர, பிரதேச சபைத் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வடமாகாண பாரவூர்தி கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.







