நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உண்மை கண்டறியப்பட வேண்டும் – ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்

81
0
Spread the love

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளுடன் கூடிய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஏனைய சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ரவீனா ஷம்தசானி, உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோரின் குடும்பத்தினர் உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ளவும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படவும் உரிமையுடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவம், இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் நீண்டகாலக் கட்டமைப்புச் சிக்கல்களை அவசரமாகத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, விசாரணை இன்றி நீண்ட காலம் தடுத்து வைத்தல், இடநெருக்கடி மற்றும் சிறைச்சாலை வசதிகள் போதுமானதாக இல்லாமை ஆகியவை பிரதான சிக்கல்களாக உள்ளன.

மேலும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகவே உள்ளனர்.

இவர்களில் பலருக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக, சுகாதார அடிப்படையிலான அணுகுமுறைகளே பொருத்தமானவை என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து உடனடி, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை நடத்துவதாக இலங்கை அதிகாரிகள் அளித்துள்ள உறுதிமொழியை வரவேற்பதாக ரவீனா ஷம்தசானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் செல்வதற்கும், கைதிகள் மாற்றப்பட்டுள்ள ஏனைய அனைத்து சிறைச்சாலைகளுக்கும் தடையில்லாமல் சென்று பார்வையிடுவதற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

கைதிகள் சித்திரவதை மற்றும் தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இடங்களைச் சோதனையிட இந்த அணுகல் மிக அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here