மன்னாரில் சட்ட விரோத மீன்பிடி பாரியளவில் நடைபெறுகிறது – மொஹமட் ஆலம் குற்றச்சாட்டு

522
0
Spread the love

தடை செய்யப்பட்ட 14 மீன்பிடி முறைகள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதிலும் மன்னார் மாவட்டத்தில் அது மிகவும் அதிகமாக பெருகி வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

இன்று(11.07) சனிக்கிழமை காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘2009 ஆம் ஆண்டுக்கு முன் விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்திலேயே இந்த தொழில் முறைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு இருந்தன. வடபகுதி மீனவர்கள் குறிப்பிட்ட தூரம் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கக் கூடிய அனுமதியைத்தான் கடற்படையும் வழங்கி இருந்தது. அன்றைய காலப்பகுதியிலே அந்த தொழிலினூடாக கிடைக்கின்ற வருமானத்தில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ளக் கூடிய வகையில் இருந்தது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவேறியதற்கு பின்பாக சூனியப் பிரதேசங்களுக்கு சென்று மீன் பிடிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்ட பின்பு இந்த தடை செய்யப்பட்ட மீன் பிடிமுறைகள் எல்லை தாண்டியதாக மாறியிருக்கிறது.
இப்போது தடை செய்யப்பட்ட டைனமைட், சுருக்குவலை போன்ற 14 மீன்பிடி முறைகளும் வடக்கு கிழக்கில் நடைமுறையில் இருப்பதோடு மன்னார் மாவட்டத்தில் அது அதிகமாக காணப்படுகிறது. நாங்கள் அதை தடை செய்வதற்கான எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்குள்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மீன்பிடி கிராமங்கள் தோறும் இந்த தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை கையாண்டு வருகிறார்கள்.

இந்த தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தியும் அரசியல்வாதிகளை சந்தித்து மனுக்களை சமர்ப்பித்தும் இன்று வரை அதற்கு எந்த பலனும் இல்லை.இது தொடர்பாக இப்போது இருக்கிற கடற்தொழில் அமைச்சரை நாங்கள் பத்து தடவைகளுக்கு மேல் சந்தித்து கலந்துரையாடல் செய்திருக்கிறோம்.
அவரும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதாக இல்லை. எனவே இந்த விடயத்தில் கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறினைத்தான் இந்த அரசாங்கமும் செய்து கொண்டிருக்கிறது.

எந்த சட்ட விரோத மீன்பிடியும் நின்ற பாடு இல்லை.பல அரசியல்வாதிகள் தமிழகம் சென்று அங்கு முதலமைச்சரை சந்தித்து வருகிறார்கள் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு எந்த தீர்வும் இதன் மூலம் கிட்ட வில்லை.
எனவே இதற்கான ஒரு தீர்வை பெற்று தரும்படி இந்த ஊடகத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here