மன்னார் நறுவிலிக் குளம் பகுதியில் 600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச தரமிக்க விளையாட்டு வளாகத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சர் சுனில் குமார கமகே நேற்று (12.07) நேரில் பார்வையிட்டு, நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
இந்த விளையாட்டு வளாகத்தில் நீச்சல் தடாகம், 400 மீற்றர் ஓட்டப்பாதை, உள்ளக விளையாட்டரங்கு, பார்வையாளர் பெவிலியன் உள்ளிட்ட நவீன வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த விளையாட்டு வளாகம், இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சாதிக்கும் திறன் கொண்ட ஏராளமான இளைஞர், யுவதிகள் உள்ள போதிலும், தரமான விளையாட்டு மைதானங்களும், முறையான பயிற்சி வசதிகளும் இல்லாத காரணத்தால் பல திறமைகள் வெளிக்கொணரப்படாமல் இருக்கின்றது.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தை பாதுகாக்கும் முதலீடாக இந்த சர்வதேச தரமிக்க விளையாட்டு வளாகத்தை அமைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் விளையாட்டு வளர்ச்சியையும் முன்னிறுத்தி இவ்வாறான நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







