ஹட்டன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) நேரடிப் பேருந்து சேவை ஹட்டன் மற்றும் காரைநகர் டிப்போக்களின் இணைப்பில் இன்று (05) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித பண்டார தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், ஹட்டன் – டிக்கோய நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் அழுத்தங்கள் மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக முடக்கப்பட்டிருந்த இந்தச் சேவை, பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தினசரி மாலை 3.45 மணிக்கு ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கியும், மறுமார்க்கமாக யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு ஹட்டன் நோக்கியும் இந்த நேரடிப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பெருமளவிலான மாணவர்களுக்கும், மலையகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பொதுமக்களுக்கும் இந்த அரச பேருந்து சேவை பாதுகாப்பானதும் நம்பிக்கையானதுமான எளிய பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவிதத் தடைகளுமின்றி இந்தச் சேவையைத் தடையின்றித் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது







