பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

64
0
Spread the love

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (14) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனிப்பட்ட தேவை நிமித்தம் தனது கட்சிக்காரர் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கை குறித்து நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி, நீதிமன்றம் திருப்தியடையக்கூடிய தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதவான், தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை 10 இலட்சம் ரூபாய் மேலதிக சரீரப் பிணையின் அடிப்படையில் தற்காலிகமாக நீக்குவதற்கு உத்தரவிட்டார்.

கூடுதல் பிணை செலுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரான பிரசன்ன ரணதுங்கவை மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here