எரிசக்தி பிரதியமைச்சர் மன்னார் விஜயம் அரச அதிபர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

54
0
Spread the love

மன்னார் மாவட்டத்தின் மின்சாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து எரிசக்தி பிரதி யமைச்சர் அர்கம் இலியாஸ் தலைமையில் இன்று (19.07) மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் மின்சார வசதிகள், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக குஞ்சுக்குளம் பகுதியில் பருவகால வெள்ளத்தால் ஏற்படும் மின்சார அபாயங்களைத் தடுக்கும் வகையில் மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் உயர்த்தி அமைப்பது, சிலாவத்துறை ,முருங்கன் மல்வத்து ஓயா பாலம் அருகிலுள்ள மின் கேபிள்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது,தள்ளாடி கடற்கரை வீதியில் வீதி விளக்குகளை அமைப்பது மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவின் சோதி நகர் பகுதியில் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச கிராமப்புற மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும்,மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அறிவிக்கப்படாத மின்தடைகளுக்குத் தீர்வு காணுதல்,மன்னார் இலங்கை மின்சார சபை அலுவலகத்தை தனித்த நிர்வாக அலகாக தரம் உயர்த்துவது, பேசாலை,ஓலைத்தொடுவாய் வீதியோர வடிகால் கால்வாயை விரிவுபடுத்தி வெள்ளப்பாதிப்பைக் குறைப்பது மற்றும் அதற்காக காற்றாலை மின் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் அரச மற்றும் தனியார் காற்றாலை மின் நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியை,மாவட்ட மக்களின் நலன் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வெளிப்படையான முறையில் பயன்படுத்துவது மற்றும் மன்னார் தீவிற்கு வெளியே முள்ளிகுளம், கொண்டச்சி பகுதிகளில் காற்றாலை அமைப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மன்னார் அரசாங்க அதிபர் உள்ளிட்ட
மாவட்டத்தின் அரச அதிகாரிகள், இலங்கை மின்சார சபை அதிகாரிகள், காற்றாலை மின் நிறுவனங்களின் பிரதிநிதிகள்,பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here