ரணில் பொருளாதார பீதியை உருவாக்குகிறார் – ஜன பலய குற்றச்சாட்டு

18
0
Spread the love

எதிர்காலத்தில் கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தெளிவான திட்டமும் பார்வையும் இருப்பதாக தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக, 2028ஆம் ஆண்டளவில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 2028ஆம் ஆண்டு முதல் கடன் மீளச்செலுத்தும் காலம் ஆரம்பிக்கும்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் டொலர்களாக இருக்க வேண்டிய நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் கையிருப்பு சுமார் 8 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருக்கும் என ரணில் விக்ரமசிங்க கூறுவது பொருளாதார அச்சத்தை உருவாக்கும் முயற்சி எனவும் கண்ணங்கர தெரிவித்தார்.
மேலும், 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய உடன்படிக்கை நிறைவடையும் பின்னணியில் அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடும் என்ற கருத்தை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்தின் ஏனைய நடவடிக்கைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தவர் என்ற பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்த கண்ணங்கர, 2015ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளே நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணிகளில் ஒன்றாக அமைந்ததாகவும் கூறினார்.
அத்துடன், அதிக வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்துதல் மற்றும் பொதுச் சொத்துக்களை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட கொள்கைகள் மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரகலய போராட்டத்தின் பின்னரும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கு பதிலாக, ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசியல்வாதிகளை பாதுகாப்பதே ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடாக இருந்ததாகவும் ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here