மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடுங்காவல்

12
0
Spread the love

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வவுனியாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 14 வயதாக இருந்துள்ளது. பெற்றோர் பிரிந்திருந்த நிலையில், அவர் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு இரண்டரை வயதான இளைய சகோதரியும் இருந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்திய பின்னர் வீட்டில் வைத்து மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான குற்றப்பத்திரிகை 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரை குற்றவாளியாகக் கண்ட நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
சம்பவம் இடம்பெற்றபோது குறித்த பெண்ணுக்கு 14 வயது என்பதும், சொந்தத் தந்தையாலேயே குற்றம் இழைக்கப்பட்டுள்ளமையும், அவருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான உளவியல் பாதிப்புகளும், எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கமும் கருத்திற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனையை விதித்துள்ளது.
இதன்படி, எதிரிக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டப்பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நஷ்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here