முன்னாள் அட்டமஸ்தானாதிபதி வழக்கில் புதிய DNA ஆதாரம்

14
0
Spread the love

அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முக்கியமான விஞ்ஞான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தனியார் வலையொளி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் காணப்பட்ட உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் பொருந்தியதாகத் தெரியவந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி முன்னதாக வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த சில விடயங்களை குறித்த DNA பரிசோதனை முடிவுகள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சந்தேகநபரான தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து பெண்களுடையவை என சந்தேகிக்கப்படும் நீண்ட தலைமுடிகள் சிலவற்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவை பாதிக்கப்பட்ட சிறுமியுடையவை அல்ல என்பது DNA பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிறுமியைத் தவிர வேறு பெண்களும் குறித்த இடத்திற்கு வந்திருக்கக்கூடிய சாத்தியம் தொடர்பிலும் விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய அறிக்கைகளில் சிறுமியின் ஆடைகளில் உயிரியல் மாதிரிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் DNA பரிசோதனை அறிக்கை, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் என சட்டத்துறை நிபுணர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், வழக்கு எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் கறுப்பு நிற கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இரகசியமாக அழைத்து வரப்படுவது தொடர்பிலும் விசாரணை அறிக்கையொன்றை கோருமாறு அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here