யாழ்ப்பாணம் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 9ஆம் திகதி 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் நேற்று (22) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டதுடன், அவை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண்ணும் சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







