மன்னார் நகர சபைக்கு சொந்தமான சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குப்பை சேகரிப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து, பாரிய அளவில் பரவியதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மன்னார் நகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் 56ஆவது படைப்பிரிவினர் சம்பவ இடத்தில் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தீயை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளதுடன், வவுனியா மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனமும் மன்னாருக்கு வருகை தந்துள்ளது.
சம்பவ இடத்தில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர், பிரதேச செயலாளர், நகர சபை தவிசாளர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் தீ விபத்துகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், குப்பைகள் மற்றும் உலர் பொருட்களை தீயிட்டு எரிப்பதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.







