பஸ் லலித்’ பலத்த பாதுகாப்புடன் குற்றப்புலனாய்வுத் திணைகளத்திற்கு

22
0
Spread the love

டுபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் இன்று (25) அதிகாலை அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 226 மூலம் இன்று காலை சுமார் 5.20 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

டுபாய் பாதுகாப்புப் படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட லலித் கன்னங்கர, சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் ஆரம்பகட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் லலித் கன்னங்கருக்கு எதிராக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here