வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒருவர், கம்பளை – புப்புரஸ்ஸ பகுதியில் இரசாயன திரவமொன்றை தண்ணீர் என நினைத்துக் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து உறவினர்களுடன் புப்புரஸ்ஸ பகுதிக்கு சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே இருந்த சந்தர்ப்பத்தில், சிறுமி வீட்டிற்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், பசுவின் பாலைப் பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தை உட்கொண்டமையே உயிரிழப்புக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்







