யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகமொன்றில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அதிகார சபைக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உணவகத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (25) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உணவக உரிமையாளருக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், குறித்த தண்டப் பணத்தை செலுத்தத் தவறினால் 6 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இதேவேளை, குறித்த உணவகத்தில் இதற்கு முன்னரும் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதே குற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







