மன்னார் உப்பளத்தில் தேசிய உப்பு நிறுவனத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டிடம் மற்றும் களஞ்சியசாலை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (27) நடைபெற்றது.
தேசிய உப்பு நிறுவனம் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர்’
“இந்தக் கட்டிடம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். பாண்டாரநாயக்க, குலந்தெனி, உப்பு சமூகங்கள் மற்றும் எமது நிறுவனத்தின் மூலம் சேமிக்கப்பட்ட நிதியிலிருந்தும், கிடைத்த இலாபத்திலிருந்தும் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது எங்களுடைய சொந்தக் கட்டிடம். எங்களுடைய சொந்த உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடம். குறிப்பாக இங்கு பணியாற்றுகின்ற தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவரும் இதற்காக பெருமைப்பட வேண்டும்.
எமது நாட்டின் பெரும்பாலான மக்கள் உப்பைப் பயன்படுத்துகின்றனர். நாம் உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். உப்பு இல்லாமல் உணவை உட்கொள்வது மிகவும் கடினம். ஆனால், அனைவராலும் உப்பை உற்பத்தி செய்ய முடியாது. அனைவரும் உப்பை உண்ணலாம். ஆனால் அனைவராலும் உப்பை உற்பத்தி செய்ய முடியாது.
அதேபோன்று, எல்லா இடங்களிலும் உப்பை உற்பத்தி செய்யவும் முடியாது. உப்பு உற்பத்தி செய்வதற்கு சில அத்தியாவசியமான இயற்கை வளங்கள் இருக்க வேண்டும். போதுமான சூரிய வெப்பம் இருக்க வேண்டும். கடல் நீர் இருக்க வேண்டும். அதற்கேற்ற நிலப்பரப்பும் சூழலும் இருக்க வேண்டும்.
சூரிய வெப்பமும் கடல் நீரும் பல இடங்களில் இருக்கலாம். ஆனால் அவை மட்டும் இருந்தால் உப்பை உற்பத்தி செய்ய முடியாது. உப்பு உற்பத்திக்கு ஏற்ற நில அமைப்பும், இயற்கைச் சூழலும் அவசியமாகும்.
அதற்கு மேலாக, அந்தப் பணியைச் செய்யக்கூடிய மனித வளமும் இருக்க வேண்டும். உப்பு உற்பத்தியின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று எமது தொழிலாளர்களின் உழைப்பாகும்.
மன்னாரில் உள்ள எமது நிறுவனத்தில் நிரந்தரமாகப் பணியாற்றும் ஊழியர்களும், பருவகால அடிப்படையில் காலத்திற்குக் காலம் பணியில் இணைக்கப்படும் ஊழியர்களும் உள்ளனர். இவர்களின் கடின உழைப்பின் மூலமே இந்த உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
எமது நிறுவனம் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளது. சுமார் 281 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், அதிலிருந்து சுமார் 250 மில்லியன் ரூபாய் இலாபத்தையும் ஈட்டியுள்ளது. அந்த இலாபத்திலிருந்து நிதியை ஒதுக்கி, இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்துள்ளோம்.
மேலும், எமது நிறுவனத்தின் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய நிர்வாகக் கட்டிடத்தையும் அமைத்துள்ளோம். அதற்கு அருகில் மேலாளர் அலுவலகக் கட்டிடமும் அமைந்துள்ளது.
எமது பிரதான நோக்கம் தரமான உப்பை உற்பத்தி செய்வதாகும். இலங்கையில் அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு முக்கிய உப்பு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக எமது நிறுவனம் செயற்படுகிறது.
மன்னார் உப்பு நிறுவனம் ஒரு காலத்தில் மூடப்பட வேண்டிய நிலையில் இருந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த நிறுவனத்தை மூடுவதற்கான நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று அதே மன்னார் உப்பு நிறுவனம் இலாபம் ஈட்டுகின்ற நிறுவனமாக மாறியுள்ளது.
அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற எமது நிறுவனம் இன்று இலாபம் ஈட்டி, அந்த இலாபத்தின் மூலம் எங்களுக்கான சொந்தக் கட்டிடத்தையும் நிர்மாணித்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்திற்கும் வருமானத்தை வழங்கக்கூடிய நிலையில் நாம் முன்னேறியுள்ளோம்.
இங்கு பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பலரும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் அறிவோம். பணியின் போது அவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், போதுமான பாதுகாப்பு அல்லது காப்புறுதி வசதி இல்லாத நிலையும் காணப்படுகிறது.
எனவே, எமது பணிப்பாளர் அவர்களின் தலைமையில், தொழிலாளர்களுக்கான சிறந்த பாதுகாப்பு முறையையும் காப்புறுதி திட்டத்தையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மன்னார் உப்பிற்கு ஒரு தனித்துவமான சிறப்பம்சம் உள்ளது. எமது நாட்டின் மக்கள் பயன்படுத்துகின்ற உணவு உப்பாகிய கிரிஸ்டல் சோல்ட் வகையில், மன்னார் உப்பு மிகவும் உயர்தரமானதாகும்.
மன்னாரில் உப்பை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சிறந்த சூரிய வெப்பமும், இயற்கையான சூழலும், உப்பு உற்பத்திக்கேற்ற நில அமைப்பும் காணப்படுகின்றன. இதன் காரணமாக மன்னாரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு சிறந்த தரத்தைக் கொண்டுள்ளது.
இலங்கை உப்பு நிறுவனத்தின் ஹம்பாந்தோட்டை உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் உப்புடன் ஒப்பிடும்போது, மன்னாரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மிகவும் வெண்மையாகவும் சுத்தமாகவும் காணப்படுகிறது. அதில் தேவையற்ற நிறமோ அல்லது மண்ணின் தன்மையோ குறைவாகக் காணப்படுவது அதன் முக்கியமான சிறப்பம்சமாகும்.
எனவே, மன்னார் உப்பு என்பது எமது நாட்டின் பெருமைக்குரிய ஒரு உற்பத்திப் பொருளாகும். இந்த உற்பத்தியை மேலும் மேம்படுத்தி, எமது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி, நிறுவனத்தை இன்னும் சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதே எமது எதிர்கால நோக்கமாகும் என தெரிவித்தார் .
மன்னார் கிராண்ட் பசார் பகுதியில் அமைந்துள்ள மன்னார் உப்பளத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னிபாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,மன்னார் தள்ளாடி 54 வதுகாலாட்படை பிரிவின் தளபதி,
மன்னார் மாவட்டச் செயலக உதவி அரசாங்க அதிபர்,
தேசிய உப்பு நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.







