மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரலாற்றில் முதன்முறையாக எட்டு உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் (Intern Doctors) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உள்ளகப் பயிற்சி வைத்தியர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று (28) காலை 8 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக வருகை தந்த 8 வைத்தியர்களும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு
பொன்னாடை போர்த்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம். ஆசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதி வந்தனைக்குரிய மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை , மன்னார் மாவட்டச் செயலாளர் கே கனகேஸ்வரன்
வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், நகர முதல்வர் டானியல் வசந்தன்
மதகுருமார்கள், வைத்தியசாலை நிர்வாக உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றியவர்கள், பல்வேறு தேவைகளுக்கு உட்பட்டிருக்கும்
மன்னார் வைத்தியசாலைக்கு முதன்முறையாக எட்டு உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை மன்னார் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரப்பிரசாதமாகும் எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த நியமனத்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு வழிகளிலும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்ததோடு சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ விற்கும் விசேட நன்றிகளைத் தெரிவித்தனர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம். ஆசாத் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கும், மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கும் அமைவாகவே இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எட்டு உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.







