யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத கொல்களம் ஒன்றை பொலிஸார் இன்று (29) சனிக்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகையின்போது, மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்கத் தயாரான நிலையில் கட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ இறைச்சியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த 43 வயதுடைய நபர் ஒருவரையும் சட்டவிரோத கொல்களத்தை நடத்தி வந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், உயிருடன் மீட்கப்பட்ட நான்கு மாடுகளும், கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சியும் திருடப்பட்ட கால்நடைகளுடன் தொடர்புடையதா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







