கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து, பாலை மரக்குற்றிகளை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (28) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, நெல் உமிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த மரக்குற்றிகளை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாரவூர்தி மற்றும் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் ஆகியவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மரக்கடத்தலை தடுக்கும் வகையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.







