தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று (30) முரசுமோட்டையில் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேச அமைப்பாளர் கேதீஸ்வரன் சஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் இளையதம்பி கணேசபிள்ளை உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத் தரப்பினருக்கும் இடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அலுவலகம் செயற்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றை உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கும் இந்த அலுவலகம் உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“முரசுமோட்டையில் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளோம். இதனூடாக இந்தப் பிரதேச மக்களுக்கு தங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கும், பிரதேச தலைவர்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வசதி ஏற்படும்.
அதேபோன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், பிரதேசங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிரதேசத் தலைவர்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அறிவித்து, அவற்றுக்கு துரிதமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த அலுவலகம் உதவியாக இருக்கும்.
ஜனாதிபதி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தச் சந்தர்ப்பத்தில், மக்களாட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு நெருக்கமான ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பிரதேச ரீதியாக இவ்வாறான மக்கள் தொடர்பாடல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மகளிர் அமைப்புகளைச் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.
குறிப்பாக போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு, இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், சிறுவர்களின் கல்விப் பிரச்சினைகள் மற்றும் கல்வியிலிருந்து இடைவிலகுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மக்களுடன் இணைந்து கண்டறிந்து செயற்படுவதற்கு இவ்வாறான மக்கள் தொடர்பாடல் அலுவலகங்கள் முக்கியமானதாக அமையும்” எனத் தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டங்கள் மற்றும் அவர்களுக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் துயரத்தை அரசாங்கம் புரிந்துகொள்வதாகவும், தங்களுடைய உயிர் உறவுகளைத் தேடி தொடர்ந்து போராடி வரும் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
“அவர்களை வலுப்படுத்துவதற்கும், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்குமான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
சட்டத்துறை அமைச்சரும் அண்மையில் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் தேவையான பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்து, நடந்த விடயங்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அமைச்சர் தெரிவித்தார்.







