யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 05 வயது சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 05 வயது சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிரியை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம், சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்ற குற்றத்திற்காக 07 வருட சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் தண்டப்பணமும் விதித்தது.
அத்துடன், சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 12 வருட சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 05 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இழப்பீட்டுத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 03 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.






