சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய விலைத் திருத்தத்துக்கு அமைய, இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு, தமது எரிபொருள் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் உள்நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவதைப் போன்று, விலை குறையும் காலங்களில் அதன் பயன் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







