ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடு – பொலிஸார் எச்சரிக்கை

24
0
Spread the love

ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களைப் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
அதிக சத்தத்தினால் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஒலி மாசுபாட்டைத் தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261ஆம் பிரிவின் கீழ், அதிக சத்தம் பொதுத் தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தாலும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்புகள் மற்றும் ஒலி அளவு தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விசேட சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மத நிகழ்வுகள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு வழங்கப்படலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, அனுமதி பெற்றிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அதிகமாகக் கேட்காத வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட விதிமுறைகளை மீறி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி சாதனங்கள் கைப்பற்றப்படவும் வாய்ப்புள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோதமான ஒலி மாசுபாடு தொடர்பில் பொதுமக்கள் 118 அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here