வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் ‘சிசுசெரிய’ சேவையின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி சில பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பேருந்துகள் தொடர்ந்து பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டால், முன்னறிவிப்பின்றி உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







