யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை மீளக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், குறித்த நஷ்டஈட்டை வழங்கத் தவறினால் மேலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளான சனிக்கிழமை திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் குறித்த கைதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை மதியம், சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்த குறித்த கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, கைதியைத் தேடும் நடவடிக்கையில் சிறைக்காவலர்கள் ஈடுபட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸாரின் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தப்பிச் சென்ற கைதியை மீளக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







