அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணத்தை அமுல்படுத்தக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

45
0
Spread the love

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி, ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னாரிலும் இன்று (31) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலையான பதவி மற்றும் பணிப் பொறுப்புகள் வழங்கப்படாமை, அடிக்கடி வேறு பதவிகளுக்கு மாற்றப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணத்தை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தி அமுல்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் தகுதிக்கும் பதவிக்கும் பொருத்தமான MN-4 மட்டத்திலான பணிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரம் தாழ்த்தி MN-2 மட்டத்திலான பணிகளை வழங்குவதைத் தவிர்த்து, அவர்களுக்கு உரிய கௌரவம் மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதுடன், MN-5 தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here