மன்னார் மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தத்தை கிராம மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான “வருமுன் காப்போம்” ஆலோசனைக் கூட்டம் நேற்று (06.09.2026) பள்ளிமுனை பெண்கள் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
புனித லூசியா ஆண்கள் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆண்கள் சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பள்ளிமுனை பகுதியில் செயற்படும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நகரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளிமுனை கிழக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மழைக்காலங்களில் மன்னார் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்தல் மற்றும் அனர்த்த நிலைமைகளின்போது கிராம மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்களின் பங்களிப்பு, அவசரகால நடவடிக்கைகள் மற்றும் கிராம மட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
“வருமுன் காப்போம்” என்ற நோக்குடன், அனர்த்தங்களை எதிர்கொள்ள சமூக மட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.






