ஸ்ரீலங்கன் விமான சேவையின் வீழ்ச்சிக்கு எயார்பஸ் கொடுக்கல் வாங்கலே காரணம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது 16 மில்லியன் அமெரிக்க டொலர் கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும், இந்த ஊழல் மோசடி தொடர்பான முக்கிய விடயங்கள் லண்டன் உயர் நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்கு விமானங்களை விற்பனை செய்தபோது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எயார்பஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும், விமான கொள்வனவு நடவடிக்கைகளின்போது கையூட்டல் வழங்கப்பட்டமை நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் சுமார் ஏழு முதல் எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும், எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 16 மில்லியன் அமெரிக்க டொலர் கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 2016ஆம் ஆண்டு எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்காக 110 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த நடவடிக்கையில் மாத்திரமன்றி, பின்னர் அந்த கொள்வனவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்த நடவடிக்கையிலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் SriLankan Airlines நிறுவனத்தின் நிதி நிலைமைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதன் விளைவாக நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனம் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் பழமையான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு இந்த கொடுக்கல் வாங்கல்கள் முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தேசிய ரீதியில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயலாகக் கருதப்பட வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய ஒருசிலரை மாத்திரம் தண்டிப்பது போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த மோசடி தொடர்பான விடயங்கள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், இதனை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக் கூற முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னணியில், எயார்பஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய பிரான்ஸ் நிறுவனமும் இலங்கையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சாட்சியமளித்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.







