அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

70
0
Spread the love

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இன்று (07) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த அனுமதிகள் தொடர்பில் கோரிக்கை விடுப்பதற்காக பணியக அலுவலகத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பணியகத்தின் பணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த தமிழ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகளும் வெளியாகியுள்ள நிலையில், தேரரின் செயற்பாட்டுக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here