வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவன் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 31 ஆம் திகதி இரவு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழக விடுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இதன்போது மாணவனை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணவனே உயிரழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மட்டத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா தெரிவித்துள்ளார் .
உயிரிழந்த மாணவன் சிறிது காலமாக இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிரேஷ்ட மாணவர்கள் குறித்த மாணவனுக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
இருப்பினும் முழுமையான விசாரணைகளின் பின்னரே மரணம் தொடர்பில் அறிக்கை வெளியிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







