வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல், சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் இன்று (19) சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை நிர்வகித்து வருவதுடன், மாவட்ட பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, நிதி ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லாத நிலை மற்றும் அதிகளவான மருத்துவமனைகள், அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிப்பதனால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச்சுமை தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனைகளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல், மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி வழங்கப்படுவதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மருத்துவமனைகளின் தேவைகளை முறையாக ஒழுங்குபடுத்தி முன்னுரிமைப்படுத்துதல், தேவைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் கொள்முதல் செயன்முறைகளில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதாரத்துறையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், மேலதிக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி மற்றும் திட்டமிடல்), ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







