மன்னார் தென் கடற்பிராந்திய பகுதியில் இன்று (12.06) வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் சகல இறங்கு துறைகளிலும் கப்பல் கழிவுகள் ஒதுங்கி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரை ஒதுங்கி வரும் இரசாயன கழிவுகள் பொலித்தீன் தயாரிப்தற்கு பயன்படுத்தப்படும் மூலக்கூறுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஏனைய இரசாயன பதார்த்தங்கள் மற்றும் கொள்கலங்கள் போன்றவைகளும் கரையொதுங்கக்கூடும் என்பதனால், கரையோரங்களில் வாழும் மக்கள் மற்றும் மன்னார் தென்கடல் கடற்கரைப் பக்கம் செல்வோர் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயற்படுமாறும், இவற்றை கேசரித்துத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மன்னார் கடற்தொழில் நீரியல்வள உதவிப் பணிப்பாளர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவைகள் இரசாயன பதார்த்தங்களாக இருப்பதனால் இவைகள் உயிர்ச்சேதங்களை விளைவிக்கக் கூடும் என்ற நோக்கிலேயே இவ்வெஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான பொருட்கள் கடற்கரையோரங்களில் ஒதுங்குவதைக் காணும்பட்சத்தில் கடற் திணைக்களத்திற்கோ அல்லது கடல் மாசுபடும் அதிகார சபைக்கோ அல்லது அரசாங்க அதிபருக்கோ உடனடியாக தகவல்களைத் தெரிவிக்குமாறு மன்னார் கடற்தொழில் நீரியல்வள உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.








