அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் ஊடாகப் பௌத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள முதலிடம் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இந்த ஏற்பாடானது தற்போதைய ஆட்சியாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்டது அல்லவென்றும், வரலாற்று ரீதியாகப் பிரித்தானியர்களுக்கும் கண்டியத் தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மிஹிந்தலை மிஹிந்து மகா சயாவின் புதிய சிகரக் கலசம் மற்றும் சூடாமணி திறப்பு விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளை ஒப்பிடுகையில், பௌத்த மதத்திற்குரிய அதே முதன்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டுமக்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தைக் கடைப்பிடிப்பதற்கான முழுமையான சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், மதத்தின் அடிப்படையில் எந்தவொரு பிரஜைக்கும் எதிராகப் பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
தாய்லாந்து நாட்டின் நடைமுறைகளைப் பற்றியும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, அங்கு இறையாண்மை மக்களிடமிருந்தாலும் மன்னராலேயே அது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும், அந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரச தலைவர் அல்லது மன்னர் ஒரு பௌத்தராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் இதே போன்றதொரு பொறிமுறையே பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.
மிஹிந்து மகா அரஹந்த தேரரின் பரிநிர்வாணம் அனுஷ்டிக்கப்படும் இந்தக் புனித பூமியில் வைத்து, தாய்லாந்து நாட்டு மக்களின் மகத்தான நிதி மற்றும் உழைப்புப் பங்களிப்புடன் இந்தத் தூபி மீளவும் நிர்மாணிக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றத் துணையாக நின்ற தாய்லாந்து அரசாங்கத்திற்கும் அதன் பிரதிப் பிரதமருக்கும் இந்நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.







