இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ந்து நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் காரணமாக நாடு முழுவதும் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 12 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,876 குடும்பங்களைச் சேர்ந்த 6,754 பேர் இந்த இயற்கைச் சீற்றத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு வீடுகள் முற்றாகவும், 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஆபத்தான மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணங்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பிரதான வீதிப் போக்குவரத்தும் முற்றாகப் தடைப்பட்டது. இதேவேளை, கிரிந்தி ஓயாவின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் அதன் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலையில் 20 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள போதிலும், நில்வளா கங்கையைத் தவிர ஏனைய பிரதான ஆறுகளில் பாரிய வெள்ள அபாயம் நிலவவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிலாபம் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்குச் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டின் பல மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







