நாடு முழுவதும் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்கும் நோக்கில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 3,900 மெற்றிக் டன் எரிவாயுவைச் சுமந்து வந்த பிராங்கோயிஸ் (Francois) என்ற கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த நிலையில், தற்போது அதிலிருந்து எரிவாயுவைத் தரை இறக்கும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, மேலும் 3,900 மெற்றிக் டன் எரிவாயுவைக் கொண்டுவரும் நான்காவது கப்பலான கொரிந்தியன் (Corinthian) எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் புதிய எரிவாயுத் தொகுதிகள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கப் பெற்றவுடன், சந்தையில் நிலவி வரும் தற்காலிகத் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, வழமை போன்ற தொடர்ச்சியான எரிவாயு விநியோகம் மக்களுக்கு வழங்கப்படும் என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.







