நடுவானில் மோதிய விமானங்கள் 4 விமானிகள் பலி

9
0
Spread the love

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ விமானங்கள் நடுவானில் மோதியதில் நான்கு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து, தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள படாங்காஸ் மாகாணத்தின் லிபா நகரிலுள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான SF-260 ரகத்தைச் சேர்ந்த இரண்டு பயிற்சி விமானங்களே விபத்தில் சிக்கியுள்ளன. விமானப்படையின் தகவலின்படி, பிற்பகல் 3.51 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இரண்டு விமானங்களும் விமானப்படைத் தளத்தின் எல்லைக்குள் விழுந்து நொறுங்கியுள்ளன.

விமானங்கள் நடுவானில் மோதிய பின்னர் கீழே விழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்தில் உயிரிழந்த நான்கு விமானிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் விமானப்படை, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SF-260 ரக விமானங்களின் அனைத்துப் பறப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமானப்படைத் தளத்திற்குள் விமானங்கள் விழுந்ததால், தரையில் இருந்த வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here