பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் இன்று (24) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் கொழும்பை வந்தடைந்ததன் மூலம், பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
புதிய சேவையின் கீழ், லண்டன் கேட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்குவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தச் சேவை 2026ஆம் ஆண்டின் குளிர்காலப் பயணப் பருவத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் இந்த மீள்வருகை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இரு நாடுகளுக்கிடையே பயணம் செய்யும் வர்த்தகப் பயணிகளுக்கும் இந்த நேரடி விமானச் சேவை பயனளிக்கும்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை விரிவுபடுத்துவது நாட்டின் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமையலாம்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் பயணிகள் எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் பிசினஸ் கிளாஸ் ஆகிய பயண வகுப்புகளைத் தேர்வு செய்ய முடியும்.







