முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகளின் வழக்கு ஆவணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
குறித்த நிதி 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்தில் 12,000 டி-சேர்ட்களை கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் அரசாங்கத்துக்கு 7.8 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அவர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சர்வதேச சட்ட அமலாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தி அவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இந்த நடவடிக்கைகளின் இறுதி முடிவு சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைப் பொறுத்தே அமையும்.







