வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த அமைப்பு மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நகரும் இந்த வானிலை அமைப்பு, ஒக்டோபர் 26ஆம் திகதி காலை வங்காள விரிகுடாவின் மேற்கு – மத்திய பகுதியில் சூறாவளியாகவும், ஒக்டோபர் 27ஆம் திகதி காலை தீவிர சூறாவளியாகவும் வலுவடைய வாய்ப்புள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை அமைப்பினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய காற்றோட்ட மாற்றங்கள் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, தெற்கு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுகிறது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்படையினரும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, வங்காள விரிகுடாவின் பாதிக்கப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.







