கனமழையால் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

9
0
Spread the love

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ள நிலையில், அவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆற்றுப்படுகைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் தலா இரண்டு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விநாடிக்கு 10,400 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கலா ஓயாவுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு திங்கட்கிழமை (ஒக்டோபர் 26) காலை 9 மணியளவில் விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அளவு விநாடிக்கு 3,800 கன அடியாக இருந்தது.

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளதுடன், மின் உற்பத்தியின்போதும் நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்படி, விநாடிக்கு மொத்தம் 93 கன மீற்றர் நீர் குடா கங்கைக்கு விடுவிக்கப்படுகிறது.

கலாவாவி நீர்த்தேக்கத்தின் இரண்டு அவசர வான்கதவுகளும் தலா ஆறு அங்குலம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விநாடிக்கு 511 கன அடி நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்படுகிறது.

மேலும், தம்புள்ள ஓயா நீர்த்தேக்கத்துக்கு விநாடிக்கு 5,500 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாகவும், அதன் நீர் சேமிப்பு 83,782 ஏக்கர் அடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீ ஓயா ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள தப்பாவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் தலா அரை அடி திறக்கப்பட்டு நீர்மட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு வந்து சேரும் நீரின் அளவைப் பொறுத்து வான்கதவுகள் திறக்கப்படும் அளவு மேலும் மாற்றமடையக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக தெதுரு ஓயா, கலா ஓயா மற்றும் குடா கங்கை ஆற்றுப்படுகைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் நீர்மட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும் என்றும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here