யாழ்ப்பாணம், செம்மணி, சித்துபாத்தி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள் பணிகளின் போது மேலும் இரண்டு மனித என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய இரண்டு எலும்புக்கூடுகளையும் சேர்த்து, செம்மணிப் புதைகுழியில் இதுவரை மொத்தம் 246 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
வெளிப்பட்டவைகளில் இதுவரை 243 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதில் ஏற்கனவே வெளிப்பட்ட மூன்று என்புக்கூடுகள் இன்று (02) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அகழ்வுப் பணியின் போது புதைகுழிக்குள் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மண் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மண் சேகரிக்கப்பட்டு தற்போது உலர விடப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக இதிலிருந்து மாதிரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மேலும், மரத்திலான பெட்டி போன்ற ஒரு அமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இது குறித்த மேலதிக விபரங்கள் தூய்மைப்படுத்தும் பணிகளுக்குப் பின்னரே உறுதியாகத் தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அகழ்வுப் பணிகள் நடைபெறாது எனவும் ஏழாம் நாள் அகழ்வுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (4) மீண்டும் தொடரும் எனவும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.







