சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2026ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகளின்படி, தெற்காசிய நாடுகளின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின்படி, இலங்கையின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,006 அமெரிக்க டொலர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது.
19,510 அமெரிக்க டொலர்களுடன் மாலத்தீவு தெற்காசியாவில் முதலிடத்தில் உள்ளது. இலங்கைக்கு அடுத்ததாக 4,930 டொலர்களுடன் பூட்டான் மூன்றாவது இடத்தையும், 2,890 டொலர்களுடன் பங்களாதேஷ் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தியாவின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,750 அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதால், அந்நாடு ஐந்தாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பை அதன் மொத்த மக்கள் தொகையால் வகுத்துக் கணக்கிடப்படும் சராசரி அளவீடாகும். இது ஒவ்வொரு குடிமகனும் உண்மையில் பெறும் வருமானத்தைக் குறிப்பதில்லை.
எனவே, இந்தப் புள்ளிவிவரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ பொருளாதார நலனையோ முழுமையாகத் தீர்மானிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







