செம்மணி அறிக்கையில் முரண்பாடு என சுமந்திரன் குற்றச்சாட்டு

28
0
Spread the love

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த மூன்றாவது இடைக்கால அறிக்கையில், முந்தைய அறிக்கைகளுடன் முரண்படும் விடயங்கள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் அடுத்த நீதிமன்றத் தவணையில் தமது தரப்பு ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்கால அறிக்கைகளிலும் குறித்த இடம் மனிதப் புதைகுழி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அங்கு குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கக்கூடியதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்றாவது அறிக்கையில் அதற்கு மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த அறிக்கையில், மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற சாத்தியமும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், யாழ்ப்பாணத்தில் இவ்வாறான காரணங்களால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை தொடர்பான பதிவுகள் உள்ளனவா என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிகாரிகளிடம் கேட்டபோது, அத்தகைய பெருமளவிலான உயிரிழப்புகள் தொடர்பான பதிவுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நோய்கள் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பொதுவாக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு அடக்கம் செய்வதற்காக அனுப்பப்பட்டதாக வைத்தியசாலைப் பதிவுகள் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அந்த இடம் 2011ஆம் ஆண்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் அங்கு பெருமளவிலான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை மற்றும் மயான நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களை செம்மணி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சேகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அகழ்வுப் பணிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பும் மேற்பார்வையும் அவசியம் என வலியுறுத்திய சுமந்திரன், அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் அதற்கு எதிராக எழுப்பப்படும் ஆட்சேபனைகள் தொடர்பான இறுதி முடிவு, மேலதிக ஆதாரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here