இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து காய்ந்த மிளகாய் இறக்குமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமையே அதன் விலை உயர்வுக்கான முக்கிய காரணம் எனச் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தரநிலைகளுக்குப் பொருந்தாதவை எனக் கூறப்படும் காய்ந்த மிளகாய் அடங்கிய 100க்கும் மேற்பட்ட கொள்கலன்களைச் சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாகச் சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் உணவு ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த மிளகாயை உள்ளூர் சந்தையில் விநியோகிக்காமல் மீண்டும் ஏற்றுமதி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய வர்த்தக சங்கங்கள் இலங்கைக்குக் காய்ந்த மிளகாய் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக விநாயகசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, உள்ளூர் சந்தையில் ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை தற்போது 1,300 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை உயர்வுகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோரின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







