ஆறு மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

27
0
Spread the love

இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவியுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, சுமார் 200 பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகத் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் லக்பிரிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

குறித்த ஆறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள 48 பன்றிப் பண்ணைகளில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது சுமார் 1,200 பன்றிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான பன்றிகள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது சில பகுதிகளில் மீண்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காகப் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய நோயல்ல என வைத்தியர் பிரதீப் குமாரவடு தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வைரஸ் பன்றிகளையே பாதிப்பதால், இந்நோயின் காரணமாக மனிதர்களுக்கு நேரடியாகத் தொற்று ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பன்றிகளின் கழிவுகளை முறையற்ற விதத்தில் அகற்றுவது நோய்ப் பரவலைத் தீவிரப்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சில சிறிய அளவிலான பண்ணையாளர்கள் பன்றிகளைத் தமது வீடுகளில் அறுத்து, அவற்றின் கழிவுகளை நீர்நிலைகளுக்கு அருகில் அல்லது நீர்நிலைகளில் கொட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பண்ணையாளர்கள் பன்றிகளின் கழிவுகளை உரிய நடைமுறைகளுக்கு அமைவாக அகற்றுவதுடன், கால்நடை மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி, பண்ணைகளில் சுகாதார மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here